நம்மில் பலருக்கு மீன் குழம்பு என்றால் மிகவும் பிடிக்கும். அதுவும் வஞ்சரம், நெத்திலி குழம்பு என்றால் அதன் சுவையே தனிதான், சுறா புட்டு என்றால் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. சென்னை, நாகப்பட்டினம், தூத்துக்குடி போன்ற கடற்கரை நகரங்களில் மீன் மிகவும் மலிவாகவே கிடைக்கும், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை போன்ற இடங்களில் மறு நாள் காலை குளிர் பெட்டி மூலம் தருவித்த மீனே கிடைக்கும். இருப்பினும் மற்ற செறித்த கொலுப்புள்ள இறைச்சியைய் காட்டிலும், மீன் உடம்பிற்க்கு மிகவும் நல்லது என்பதால், பலரும் மீன் உணவையே விரும்புவர், ஆனால் மீனவனைப்பற்றி சிரிதேனும் நினைத்துப்பார்ப்பது கூடக்கிடையாது. மீனவன் கடலுக்கு செல்லும் பொழுது, அவனுடய மனைவி தாலியை கலற்றி வைப்பது பழக்கம், இன்றும் அந்த வழக்கம் தொடர்கிறதா என்பது தெரியாது, ஆனால் தமிழ் நாட்டைச்சேர்ந்த மீனவனுக்கு இது கண்டிப்பாக பொருந்த வேண்டிய அவலம்.
இந்திய கடல் எல்லையோர ரோந்துப்படை, தமிழக மீனவர்களிடம் வைக்கும் சட்ட திட்டங்களை சொல்லி மாளாது. அனைத்து சட்ட திட்டங்களும் நமக்குத்தான். விசைப்படகில் என்ன கொண்டு போக வேண்டும், எவ்வளவு தூரம் போக வேண்டும், எந்த வகையான மீன்களை பிடிக்க வேண்டும். இனி எந்த எந்த தினத்தில் அவர்கள் தங்கள் மனைவியுடன் பொழுதை களிக்க வேண்டும், என்ன வகையான உணவுகளை உண்ண வேண்டும் என்று மட்டும் சொல்லாமல் விட்டு விட்டார்கள் புண்ணியவான்கள். கடலில் என்ன மைல் கல்லா நட்டு வைத்திருக்கிறார்கள்?. அதுவும் இவர்கள் சொல்லும் தூரத்தில் மீன் பிடிக்க முடியாது, ஏன் நத்தை கூட கிடைக்காது. இப்படி சட்டம் இயற்றும் பேர்வழிகளை, ஒரு நாள் கடலுக்கு அனுப்பி மீன் பிடிக்க வைக்க வேண்டும், அப்படி செய்தால், அவர்கள் படும் இன்னல்களும், நடை முறை பிரச்சனைகளும் புரியவரும்.
கச்சத்தீவை திருமதி இந்திராகாந்தி 1974ல் தனது தந்தை வீட்டு சொத்துபோல இலங்கைக்கு தாரை வார்த்து கொடுத்தார். நாட்டின் பாதுகாப்பு கருதி அப்படி கொடுத்திருந்தாலும் கூட, சேது சமஸ்தானத்திற்க்கு சொந்தமானது என்று எத்தனையோ ஆவனங்கள் இருந்தும், தமிழர்களிடம் ஆலோசிக்காமல் கொடுத்தது, மன்னிக்கப்பட முடியாத குற்றம். சிரிமாவோ பண்டாரு நாயக நம்மிடம் மிகவும் பணிவுடன் மிரட்டி வாங்கிய நிலம் என்பது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பாகிஸ்தானும், சீனாவும் விமானதளம் அமைக்க இலங்கையிடம் கேட்டது, அதற்க்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது என்பதற்க்காக, தாரளமாக கச்சத்தீவை தாரை வார்த்தார், ஆனால் இந்திய மீனவர்கள், அதாவது தமிழக மீனவர்கள் தங்கள் மீன் பிடி வலைகளை உலர்த்துவதற்க்கும் , தங்கி இளைப்பாருவதற்க்கும், அந்தோனியார் கோவில் திருவிழாவில் பங்கேற்க்கலாம் என்று இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் உள்ளது. அதில் ஒரு இம்மி அளவை கூட இலங்கை அரசு பின்பற்றுவதில்லை. அப்படி கொடுத்து விட்டதால் மட்டும் பிரச்சினை ஓய்ந்த பாடில்லை. சீனர்களின் இலங்கை வரவும், முதலீடும், சற்று தள்ளித்தான் போட முடிந்தது. ராஜபக்ஷே, தான் ஒரு சீன சார்பு கம்யூனிஸ்ட் என்று காட்டிக்கொள்வதில்தான் பெருமிதம் கொள்கிறார். ஒரு பொருளை கொடுத்து, ஒரு வாக்கு பெரும் போது, அந்த பொருளுக்கு மதிப்பு இருக்கும் வரைதான், கொடுத்த வாக்கிற்கும் மதிப்பிருக்கும். இப்பொழுது என்னவாயிற்று, கச்சத்தீவையும் இழந்தோம், அதை உபயோகிக்கும் நமது மீனவர்களின் நலன் சார்ந்த அடிப்படை உரிமையும் இழந்தோம்.
1974ல் இருந்து பதவிக்கு வரும் கட்சிகளெல்லாம், கச்சத்தீவை மீட்டு விடுவோம் என்று சூடம் கொளுத்தி சத்தியம் செய்யாதது ஒன்றுதான் பாக்கி, பதவிக்கு வந்த பின் மக்களை மறந்துவிடுவது போல், கொடுத்த வாக்கையும் மறந்துவிடுவது, அவர்களுக்கும் புதிதல்ல, நமக்கும் புதிதல்ல. எத்தனை நாட்களுக்குத்தான் மறப்போம் மன்னிப்போம் என்று, ஓட்டுபோட்டுவிட்டு நகம் கருக்க காத்துக்கிடப்பது, இந்த வாக்களிக்கும் நிகழ்வுக்கு ஜன நாயகக்கடமை என்று பேர் வேறு. இது வரைக்கும் 300 மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் சுடப்பட்டு இறந்து விட்டார்கள். நாம் கடலுக்கு அப்பால் வாழும் நம் இனத்தைப்பற்றி இப்பொழுது கவலை கொள்ள வேண்டாம், முதலில் உள்ளுர் தமிழனைப்பற்றி கவலை படுவோம். முதலில் மனிதன் என்ற உணர்வே இல்லாத போது, தமிழுணர்வு எப்படி சாத்தியப்படும். மீனவனுக்கு ஏதாவது நிகழ்ந்து விட்டால் போதும், அனைத்து அரசியல் கட்சிகளும் நான் நீ என்று போட்டி போட்டுக்கொண்டு நிவாரணம் கொடுக்க முன் வருவது, பார்த்து பார்த்து சலித்து விட்டது. ஒருவர் தமிழில் அடுக்கு மொழி பேசி எள்ளி நகையாடுவது, ஒருவர் உணர்ச்சி உரையாற்றுவது, மற்றொருவர் கட்சிக்கு எப்பொழுது விடுப்பு விடுவார் என்று அவருக்கே தெரியாது. இவர்கள் எல்லாரின் உணர்வுப்பூர்வமான நோக்கமும் ஒரே நேர் கோட்டில் வரும் வரை, யாருக்கும் விடிவு இல்லை. இப்படி ஒன்று நடக்கும் என்று ஒருவன் காத்திருந்தால், அவன் பகலிலேயே கனவு காணும் முழு மூடன்.
கேட்பாரற்றிருக்கும் அனாதையை அடித்தால், யார் வந்து கேட்கப்போகிறார்கள். 49-ஓவை மட்டும், மின் வாக்குப்பதிவு சாதனத்தில் கொண்டு வந்தால் தெரியும், இவர்களின் உண்மையான நிலை. பாகிஸ்தான் கடலோர படையினர் கூட, குஜராத் மீனவர்களை சுடுவதில்லை, திரும்பி போகச்சொல்லுகிறார்கள், ஆனால் எங்குமே நடக்காத ஒரு அராஜஹம், பாக் ஜல சந்தியிலே ஆண்டாண்டு காலமாக நடந்து கொண்டேதான் இருக்கிறது. இந்த அரசியல்வாதிகள் இனி மேலாவது நேர்மையாக இருக்க விரும்பினால், தயவு செய்து கச்சத்தீவையும், இலங்கை தமிழனையும் பற்றி பேசாமலிருப்பதே மேல். மீனவர்களின் நலன் காக்க, உடனடியாக, மத்திய அரசை தமிழக அரசு நிர்ப்பந்திக்க வேண்டும். கட்சி சார்பற்று அனைத்து தலைவர்களும் ஒரே கருத்தை கொண்டார்களே ஒழிய, தீர்வு என்பது வெறும் கானல் நீரே.