Saturday, July 7, 2012

எங்கே போனது தமிழனின் தன்மான உணர்ச்சி


சமீபத்தில் என்னை மிகவும் பாதித்த செய்திகளில் ஒன்று என்னவென்றால், இலங்கையின் 9 விமானப் படை வீரர்களுக்கு தமிழகத்திலுள்ள தாம்பரம் விமானப் படை நிலையத்தில் ஒன்பது மாதம் தொழில்நுட்பப் பயிற்சி அளிப்பதற்கு மத்திய அரசு அளித்துள்ள ஒப்புதல். மனிதன் இரண்டு விதமாக வாழலாம், ஒன்று இந்த பூமியில் பிறந்ததால் வாழ்வது, மற்றொன்று பிறர் அறிய மற்றவரும் நலம்பெற வாழ்வது. இதில் தமிழன் இரண்டாவது பிரிவைச்சேர்ந்தவன் என்பதற்க்கு பலரது வாழ்க்கைக்குறிப்புகள் உள்ளன. ஆனால், கடந்த முப்பது ஆண்டுகளாக எங்கே போய் ஒளிந்து கொண்டிருக்கிறான், அந்த வீரமுள்ள, மானமுள்ள தமிழன். இப்பொழுது தமிழனுக்குள்ள ஒரே ஆறுதல், பழ நெடுமாறன், வைகோ மற்றும் தமிழருவி மணியன். இவர்களும், இவர்களுடைய ஆதரவாளர்களும், தமிழனின் மொத்த எண்ணிக்கையில் 10% கூடப்பெறாது.

ஏழையின் பேச்சு எப்படி அம்பலம் ஏறும். சந்தர்ப்பவாத அரசியல் ஒன்றே தமிழகத்தின் சாபக்கேடாகப்போய்விட்டது. என்ன செய்வது? நமக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்புக்களும் அவ்வளவே, ஒன்று கெட்டது மற்றொன்று மிகவும் கெட்டது, இதில் எதை தேர்ந்தெடுப்பது என்பதற்க்கு, இரவெல்லாம் கண் விழித்து யோசிக்க வேண்டிய அவசியமும் இல்லை. முத்தமிழ் அறிஞருக்கு எப்பொழுதெல்லாம் சுய நலத்திற்க்கு பங்கம் வருகிறதோ, அப்பொழுதெல்லாம், தமிழனுக்குரிய தன்மான உணர்ச்சி பொங்கி எழும். மூவர் வாழ்வுரிமைக்காக போராடியபோதும் சரி, பெரியார் அணை போராட்டதின் போதும் சரி, ஈழத்தில் தமிழன் கொத்துக்கொத்தாக மடிந்த போதும் சரி, இவர்கள் காட்டிய மெத்தனம் நாடறியும்.

உலகமெங்கும் அணு உலைக்கு எதிர்ப்பாக குரல் கொடுத்துக்கொண்டிருக்கும் சமயத்தில், தமிழகத்தில் எதற்காக புதிய அணு உலை. எதிர்ப்பு குரல் கொடுப்பவர்களின் மேல் எண்ணிலடங்கா வழக்குகள், குற்றச்சாட்டுகள். இதில் கிடைக்கும் மின்சாரத்தில் 20%தத்தை கேரள அரசுக்கு கொடுக்க, மத்திய அரசிடம், அவ்விட பூமி விண்ணப்பித்துள்ளது. தமிழனின் உணர்ச்சிகளுக்கு மத்திய அரசு என்றுமே செவி சாய்த்ததில்லை.  நிஜமாகவே நாம் இந்தியாவிலதான் இருக்கின்றோமா என்ற ஐயப்பாடே மேலோங்கி நிற்கிறது. மத்திய அரசாகட்டும் தேசிய கட்சியாகட்டும், இந்திய வரைபடத்தில் தேர்தலின் போது மட்டும்தான், தமிழகம் அவர்களின் கண்ணில் படும், அது வரை மத்திய அரசின் கையில், தமிழகம் பாடாய்படும்.

விலைவாசி உயர்வை பற்றி பேசுவதற்க்கு ஆளில்லை, கட்சியில்லை. நில அபகரிப்பை பற்றி கேட்டால், சிறை நிரப்பும் போராட்டம். ஊழல் செய்து சிறை சென்று வந்தால், வீதியெங்கும் தோரணம்,வாழ்த்துரைகள். தெரிந்தோ தெரியாமலோ நமக்கே அவர் மீது ஒரு பரிதாபத்தை உண்டுபண்ணிவிடுவது, எதோ நாட்டின் இரையாண்மை காக்க சிறை சென்று வந்தவர் போல. தலை விரித்தாடும் ஊக வீயாபரத்தை தடுக்க நாதியில்லை, வாங்கமலேயே வாங்குவது, விற்காமலேயே விற்பது. இப்படி அத்தியாவசிய பொருட்களையும் யூக சந்தையில் வைத்தால், சாமன்யன் இனிமேல் எதை தின்பது.

இனிமேலாவது சக மனிதனின் துயர் துடைக்க கை கோர்ப்போம். தமிழன் ஒரு தனிப்பெரும் சக்தி என்று உலகுக்கு எடுத்துக்காட்டாய் திகழ்வோம். தமிழனுக்கு கற்றுக்கொடுக்க நினைப்பவன் மூடன், தமிழனிடம் கறகவேண்டியவை ஏராளம் என்று இவ்வுலகை உணரவைப்போம்.

Facebook